பாலிவுட்

மும்பையின் பெயரைக் கெடுத்து வருகிறார் கங்கணா ரணாவத்: நக்மா சாடல்

ஐஏஎன்எஸ்

மகாராஷ்டிர மாநிலம் மற்றும் மும்பை நகரத்தின் பெயரை நடிகை கங்கணா ரணாவத் கெடுத்து வருவதாக, நடிகையும், அரசியல் பிரமுகருமான நக்மா கூறியுள்ளார்.

மும்பை மற்றும் அதன் காவல்துறையை நடிகை கங்கணா ரணாவத் சாடிப் பேசி வருகிறார். மும்பையில் தனக்குப் பாதுகாப்பில்லை என்றும், மும்பை காவல்துறையை விட, தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறையின் பாதுகாப்பைத் தான் நம்புவதாகவும் கூறியிருந்தார். கங்கணாவின் இந்தக் கருத்துகளுக்கு மும்பையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே நக்மாவுக்கும் - கங்கணாவுக்கும் கருத்து மோதல் வெடித்துள்ளது.

"மகாராஷ்டிரா, மும்பையின் பெயரைக் கங்கணா கெடுத்து வருகிறார். உலக அளவில் மும்பை மகாராஷ்டிராவின் பெயரைக் கெடுப்பதில் முக்கிய நபராக இருக்கிறார். ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கும் அவப்பெயரைக் கொண்டு வருகிறார். முதலில் வாரிசு அரசியல் என்று ஆரம்பித்தார். பின் பாலிவுட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களுக்கு எதிரானவர்கள் என்று சொன்னார். இதன்பின் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றார். இதைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்று நக்மா செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, கங்கணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, "பிரதமர் வரிப் பணத்தை வீணடிக்கிறார். தனது கட்சிக்கு ஏற்றாற்போல பேசுவதால் கங்கணா ரணாவத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பைக் கொடுத்துள்ளார். ஆனால், கங்கணா மும்பைக்கு எதிராகப் பேசுகிறார். பாலிவுட் மூலமாகப் புகழடைந்திருப்பவர் இன்று பாலிவுட்டைப் பற்றி, அவருக்கு அத்தனையையும் தந்திருக்கும் மும்பை நகரத்தைப் பற்றி அவதூறு பேசுகிறார்" என்று நக்மா கருத்துப் பகிர்ந்திருந்தார்.

மேலும், கங்கணா திட்டமிட்டு அவதூறு பேசி வருவதாகவும், நடிகர் சுஷாந்தின் மரணம் பற்றிய விசாரணையைத் தனது சொந்த நோக்கத்துக்காகத் திசை திருப்பியதாகவும் குற்றம் சாட்டி நக்மா பதிவிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT