பாலிவுட்

கரோனா நெகட்டிவ்: மும்பை விரையும் கங்கணா ரணாவத்

ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகை கங்கணாவுக்குக் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதால் அவர் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பைக்கு விரைந்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்திலிருந்து, மும்பை வருவதற்கு முன், கங்கணா மற்றும் அவருடன் பயணிப்பவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கங்கணாவின் சகோதரி மற்றும் அவரது உதவியாளருக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், கங்கணாவிடம் எடுக்கப்பட்ட மாதிரியைப் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் கங்கணாவிடம் பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது.

இதில் அவருக்குக் கரோனா தொற்று இல்லை எனப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதால், விமானம் மூலம் மும்பைக்கு விரைந்துள்ளார்.

முன்னதாக கங்கணா ரணாவத், ஊரடங்கு சமயத்தில் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றார். ஊரடங்கு நாட்கள் முழுவதையும் அங்குதான் அவர் செலவிட்டார். சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம், மும்பை காவல்துறை பற்றி கங்கணாவின் சாடல் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத்துக்கு, கங்கணாவுக்கும் கருத்து மோதல் வெடித்தது.

மும்பை பாதுகாப்பாக இல்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா இது என்கிற ரீதியில் கங்கணா சொன்ன கருத்துகளுக்கு சஞ்சய் கடுமையாகப் பதிலளித்திருந்தார். அப்படிப் பாதுகாப்பில்லை என்று நினைத்தால் மும்பைக்கு வர வேண்டாம் என்று சஞ்சய் கூறியிருந்தார். ஆனால், தான் செப்டம்பர் 9-ம் தேதி அன்று மும்பைக்கு வரவுள்ளதாகவும், முடிந்தால் தன்னைத் தடுக்குமாறும் கங்கணா சவால் விட்டிருந்தார்.

SCROLL FOR NEXT