பாலிவுட்

போதை மருந்து விவகாரம்: ரியா சக்ரபர்த்தி கைது

செய்திப்பிரிவு

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபர்த்தியை தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர்கைது செய்துள்ளனர்.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ரியாவின் சகோதரர் ஷௌவிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக ரியாவை போதை மருந்து தடுப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் சுஷாந்துடன் தான் போதை மருந்து உட்கொள்வது வழக்கம் என ரியா வாக்குமூலம் தந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த சில வருடங்களாகவே சுஷாந்த் போதை மருந்து பழக்கம் கொண்டிருந்தார் என்றும் ரியா கூறியதாகத் தெரிகிறது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் 2017ஆம் ஆண்டில் ஆரம்பித்து, ரியா, போதை மருந்து தொடர்பாகப் பலரைத் தொடர்பு கொண்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் ரியாவின் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, செவ்வாய் அன்று, மும்பையில் போதை மருந்து தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தார் ரியா சக்ரபர்த்தி. தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விவரங்கள் மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT