2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது இப்படம் 'லட்சுமி பாம்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார்.
கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
இப்படம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி அக்ஷய் குமார் பிறந்த நாளன்று ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'லட்சுமி பாம்' திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது எனவும் படம் வெளியாக இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவி வரும் அசாதாரண சூழலே ‘லட்சுமி பாம்’ வெளியீட்டுத் தேதி தள்ளிப்போவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இது தவிர படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்த ராகவா லாரன்ஸ் முழு திருப்தியடையாததால் இன்னும் சில நகைச்சுவைக் காட்சிகளைப் படமாக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இன்னும் இரண்டு மாத காலம் படப்பிடிப்பு நடத்த அக்ஷய் குமாரிடம் லாரன்ஸ் அனுமதி பெற்றதாகவும் தெரிகிறது.
ஆனால், இந்தக் காட்சிகளில் அக்ஷய் குமார் நடிக்கப்போவதில்லை எனவும் மற்ற கதாபாத்திரங்களை வைத்து இப்படப்பிடிப்பை நடத்த லாரன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் படத்தின் ட்ரெய்லர் எடிட் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆகஸ்ட் 18 ஆம் தேதியே வெளியாக வேண்டிய இப்படத்தின் ட்ரெய்லர் பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படம் அக்ஷய் குமாருக்கு முக்கியமான படம் என்பதால் மிகவும் கவனத்துடன் எடுக்கப்படுவதாகவும், ஒரு சில காட்சிகளை இதற்கு முன்பே பலமுறை மாற்றியமைத்ததாகவும் படக்குழுவினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.