வாரிசு அரசியலால் தான் பாதிக்கப்பட்டதாகக் கூறியபோது பலர் தன்னைக் கிண்டல் செய்தாலும், அதுதான் உண்மை என்றும், தானும் தனியாக பல விஷயங்களை எதிர்கொண்டு கஷ்டப்பட்டிருப்பதாகவும், தனது கஷ்டங்கள் சக நடிகர் அக்ஷய் குமாருக்குத் தெரியும் என்றும் நடிகர் சைஃப் அலி கான் கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி மற்றும் நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதியின் மகன் சைஃப் அலி கான். நடிகர் சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் பற்றி பரபரப்பாக பேசப்பட்ட போது தானும் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்ட ஒருவனே என்று சைஃப் கூறியிருந்தார். ஆனால் நடிகையின், கிரிக்கெட் வீரரின் மகனாக இருக்கும் சைஃப்புக்கு வாரிசு அரசியலா என்று பலர் அவரைக் கிண்டல் செய்தனர். தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் சைஃப் அலி கான் பேசியுள்ளார்.
"எனக்கு எதுவும் எளிதாகக் கிடைத்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. சிலர் அப்படி இல்லை என்று சொல்லலாம். ஆனால் பலர் செய்ய விரும்பாத விஷயங்களை என் வாழ்வில் செய்திருக்கிறேன். 'சுரக்ஷா', 'ஏக் தா ராஜா' போன்ற பெயர் தெரியாத படங்களில் மூன்றாம் நாயகனாகக் கூட நடித்திருக்கிறேன்.
ஆனால் நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணியதே இல்லை. ஒரு வேலை செய்து, சம்பாதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். எந்த முன்னேற்றமும் அப்போது இல்லை என்று தெரிந்தாலும் சமாதானம் செய்து கொண்டேன். அது 25 வயதில் உங்களுக்கு உதவலாம். 25 வயதில் பெரிய முன்னேற்றம் இல்லையென்றால் பரவாயில்லை. ஆனால் அதே நிலை 50 வயதில் இருந்தால் பிரச்சினை. எப்படி இருந்தாலும் எந்த வேலையாயிருந்தாலும் அப்படித்தானே.
நானும் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். நான் சொல்ல வந்தது என்னவென்றால் இது ஒரு வியாபாரம். இங்கு எல்லாம் நடக்கும். இங்கும் அரசியல், அதிகாரம், சூழ்ச்சி எல்லாம் இருக்கும். எல்லோருமே அவரவர் தேவைக்குத்தான் இங்கிருக்கின்றனர். ஒரு அளவுக்கு அதிகாரம் இருந்தால் அவர்களால் விஷயங்களைக் கட்டுப்படுத்த முடியும். எனவே அதை செய்கிறார்கள்
எனக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அடுத்த நாளே யாரோ ஒருவரது செல்வாக்கினால் என் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. மன்னித்துவிடுங்கள், இதுதான் நிலைமை, எங்கள் கையில் இல்லை என்பார்கள். முதல் முறை எனக்கு அப்படி நடந்த போது நான் இளைஞன். எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் இரண்டாவது முறை நடந்த போது நானே சிலரை தொலைப்பேசியில் அழைத்து பிரச்சினை செய்தேன். பிறகு அந்த வாய்ப்பு கிடைத்தது.
தவறு எங்கு நடந்தாலும் தவறு தான். அதனால் தான் நானும் வாரிசு அரசியலால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொன்னால் கிண்டல் செய்பவர்களைப் பார்க்கும் போது கோபம் வருகிறது. ஏனென்றால் நானும் கடினமாக உழைத்தே வந்திருக்கிறேன். எனக்கு சலுகை இருந்தது, வாரிசு அரசியல் பிரச்சினை உனக்குத் தெரியாது என்று சிலர் சொல்வார்கள். எனக்கும் மோசமான காலகட்டம் இருந்திருக்கிறது, தனிமையான போராட்டங்கள் இருந்திருக்கிறது. எங்கள் எல்லோருக்குமே அப்படித்தான்.
குறிப்பாக நான் வளர்ந்த காலகட்டத்தில், அக்ஷய் குமாருக்குத் தெரியும் நான் எவ்வளவு போராடி வந்தேன் என்று. அவரது போராட்டம் குறித்து எனக்குத் தெரியும். எனவே துறையின் ஏற்ற இறக்கங்கள், விசித்திரங்கள் எல்லாவற்றையும் நானும் பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நாம் தத்துவவாதி போல சிந்திப்போம். சரி என்ன நடக்கிறதோ நடக்கட்டும், நான் செய்யும் வேலையில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைக்க ஆரம்பிப்போம்.
ஆனால் பொதுவாக எனது பயணத்தை நான் நன்றியோடு திரும்பிப் பார்க்கிறேன். இது ஒரு அற்புதமான துறை. இங்கு எதுவும் நடக்கும். ஜாக்கி ஷெராஃப் சொன்னது போல, படப்பிடிப்பில் உதவியாளாக இருக்கும் ஒருவன் சூப்பர்ஸ்டாராக மாறலாம்" என்று சைஃப் அலி கான் பேசியுள்ளார்.