நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக மத்திய அரசுக்கு சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எதுவுமே இன்னும் தொடங்கப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஆகியவை குறித்து பல்வேறு தேதிகள் மாற்றம் நடந்தது.
இறுதியாக செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்படும் என தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது.
நீட் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இந்தத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள், அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தற்போது திரையுலக பிரபலங்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கரோனா அச்சுறுத்தல் காலத்தில் தன் உதவிகளால் இந்திய அளவில் பாராட்டைப் பெற்று வரும் நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தேசத்தின் தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்துக்கு எனது வேண்டுகோள். இந்த கோவிட் நெருக்கடி காலத்தில் நாம் மாணவர்களின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடாது"
இவ்வாறு சோனு சூட் தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டில் பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் ஆகிய ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டுள்ளார் சோனு சூட்