கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதியன்று சுவாசப் பிரச்சினை, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் தத், தன் உடல் நலனைக் கவனித்துக் கொள்ள நடிப்பிலிருந்து சில காலம் ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்தார்.
மேற்கொண்டு அவரது குடும்பத்திலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றாலும் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக திரைத்துறையைச் சேர்ந்த கோமல் நட்டா பகிர்ந்தார். தற்போது இதற்கான சிகிச்சை மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சஞ்சய் தத்துக்குத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவரது மனைவி மான்யதா தத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சஞ்சுவின் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அவருக்கு பொழிந்த அன்புக்கும் ஆதரவும் எப்படி நன்றி சொல்வது என எனக்கு தெரியவில்லை.
சஞ்சு தன் வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறார். ஆனால் உங்களுடைய வாழ்த்தும் ஆதரவும் மட்டுமே எப்போதும் அவரை கடினமான கட்டங்களை கடக்க உதவியது. இதற்காக நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். தற்போது இன்னொரு சவால் எங்களுக்கு உருவாகியுள்ளது. இந்த முறையும் அதே அன்பும் ஆதரவும் அவருக்கு கிடைக்கும் என்பதை நான் அறிவேன்.
ஒரு குடும்பமாக, இந்த நேர்மறை தருணத்தையும் ஆசியையும் நாங்கள் எதிர்கொள்ள முடிவு செய்திருக்கிறோம். இது ஒரு கடினமான, நீண்ட பயணம் என்பதால் இயன்றவரை இயல்பாகவும், புன்னகையுடனும் எங்கள் வாழ்க்கையை வாழப் போகிறோம். சஞ்சுவை எந்தவொரு எதிர்மறை விஷயங்களும் அணுகாமல் இருக்க இதை செய்யவேண்டியுள்ளது.
இந்த கடினமான காலகட்டங்களில் துரதிர்ஷ்டவசமாக, என்னுடைய கரோனா தனிமைக் காலம் இன்னும் இரண்டு நாட்கள் மீதியிருப்பதால், என்னால் சஞ்சுவுடன் மருத்துவமனையில் இருக்கமுடியவில்லை. ஒவ்வொரு போரிலும் ஒரு வழிகாட்டியும், கோட்டை காப்பாளரும் இருக்கவேண்டும். இருபது ஆண்டுகளாக எங்கள் குடும்பம் நடத்தும் புற்றுநோய் அறக்கட்டளையை நிர்வகித்து வருபவரும், சஞ்சுவின் அம்மாவின் புற்றுநோய் போராட்டத்தையும் பார்த்தவருமான ப்ரியா எங்களது வழிகாட்டியாக செயல்படுகிறார். நான் கோட்டையை காத்து வருகிறேன்.
சஞ்சுவுக்கு முதற்கட்ட சிகிச்சை மும்பையில் அளிக்கப்படவுள்ளது. கரோனா சூழலை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட பயண திட்டங்களை நாங்கள் வகுக்க வேண்டும். இப்போதைக்கு கோகிலாபென் மருத்துவமனையில் உள்ள சிறந்த மருத்துவர்களின் பொறுப்பில் சஞ்சு இருக்கிறார்.
உங்கள் அனைவரிடமும் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். அவரது நோயை பற்றிய வதந்திகளை பரப்புவதை நிறுத்தவும். மருத்துவர்கள அவர்களது பணியை செய்யட்டும். சஞ்சுவின் உடல்நலனை பற்றிய தகவல்களை தொடர்ந்து உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு மான்யதா தத் கூறியுள்ளார்.