இயக்குநர் கரண் ஜோஹருக்குக் கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ கவுரவத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நடிகை கங்கணா ரணவத் கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து இயக்குநர் கரண் ஜோஹரை கங்கணா ரணவத் சாடிப் பேசி வருகிறார். இதற்குப் பல வருடங்கள் முன்னும், பாலிவுட்டின் வாரிசு அரசியலில் கரண் ஜோஹரின் பங்கு குறித்து அவர் எடுத்த பேட்டியிலேயே நேரடியாகச் சாடியுள்ளார் கங்கணா.
ஆனால் இம்முறை கங்கணாவின் எதிர்வினைக்குக் காரணம், கரண் ஜோஹர் இணைந்து தயாரித்திருக்கும் 'குஞ்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்' திரைப்படமே. இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானி என்று சொல்லப்படும் குஞ்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைக் கதையை, 1999 கார்கில் போரில் அவரது பங்கைச் சொல்லும் படம் இது. இந்தப் படத்தில் பாலின பாகுபாடு குறித்துச் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளுக்கு ஏற்கனவே நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கங்கணா இந்தப் படம் தொடர்பான ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட் குஞ்ஜன் சக்ஸேனாவுடன் உதாம்பூர் விமானப்படை தளத்தில் சக விமானியாக இருந்த ஸ்ரீவித்யா ராஜன் என்பவரைப் பற்றியது. ஸ்ரீவித்யா தான் கார்கிலுக்குச் சென்ற முதல் பெண் விமானி என்றும், ஒரு பெண் விமானப் படையில் சேர அங்கிருக்கும் ஆண் விமானப்படை வீரர்களுடன் பலப் பரீட்சை நடந்ததாக திரைப்படத்தில் காட்டப்படுவது போல எதுவும் நடந்ததில்லை என்றும், மேலும் படத்தில் பல உண்மைத் தகவல்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பகிர்ந்திருக்கும் கங்கணா தரப்பு, "கரண் ஜோஹரின் பத்மஸ்ரீ கவுரவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். அவர் வெளிப்படையாக என்னை அச்சுறுத்தி, நான் துறையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு சர்வதேச தளத்தில் சொன்னார். சுஷாந்தின் திரை வாழ்க்கையை நாசமாக்கச் சதி செய்தார். யூரி யுத்தத்தின் போது பாகிஸ்தானை ஆதரித்தார். இப்போது நமது ராணுவத்துக்கு எதிராக, தேசிய எதிர்ப்பைக் காட்டும் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்" என்று கூறியுள்ளது.
ஏற்கனவே ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று, ஒரு கவிதை மூலமாக, கரண் ஜோஹரை விமர்சித்திருந்தார் கங்கணா. அதற்கு முன் ஜான்வி கபூரை தாக்கிப் பேசியிருந்தார்.
ஆனால் இந்த விவகாரத்தில் கங்கணா மட்டுமில்லாமல் இன்னும் பலரும் இந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை வைத்துப் படத்தை எதிர்த்து வருகின்றனர். இந்திய விமானப்படையை கரண் அவமதித்துவிட்டார் என்று சொல்லும் ஹேஷ்டேக்கும் கடந்த வாரம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது நினைவுகூரத்தக்கது.