ஜீ 5 தளத்தில் வெளியாகியிருக்கும் அபய் 2 என்கிற வெப் சீரிஸ் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
கென் கோஷ் இயக்கத்தில் குணால் கெம்மு நடித்திருக்கும் வெப் சீரிஸ் 'அபய் 2'. ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்தத் தொடர் ஜீ5 தளத்தில் வெளியானது. இதில் ஒரு பகுதியில் காவல் நிலையத்தில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதில் குற்றவாளிகள் பலகையில் குதிராம் போஸ் என்கிற சுதந்திரப் போராட்ட வீரரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதை கவனித்த சில பார்வையாளர்கள், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர ஆரம்பித்தனர். மேலும் இந்தத் தொடரின் தயாரிப்பாளர்களையும் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து #BoycottZee5 என்கிற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது.
ஜீ 5 தரப்பில், "தயாரிப்பாளர்களுக்கோ, நிகழ்ச்சிக்கோ, தளத்துக்கோ எந்த ஒரு சமூகத்தையும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. எங்களுக்குக் கிடைத்த பின்னூட்டத்தை மனதில் வைத்தும், ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்கும் வண்ணமும், அபய் 2 தொடரின் ஒரு காட்சியில் (கவனக்குறைவாக) இடம்பெற்றுள்ள அந்த புகைப்படத்தை மங்கலாக்கியுள்ளோம். இந்த பிழைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறோம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால் இதையும் மீறி நெட்டிசன்கள் பலரும் ஜீ 5 தளத்தை விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். இந்த மன்னிப்பு போதாது என்றும், இது எந்த ஒரு சமூகத்தையும் புண்படுத்தவில்லை, மாறாக சுதந்திர போராட்டம் என்கிற தேசிய பெருமைக்கு இழுக்கு என்கிற ரீதியில் பலர் பகிர்ந்துள்ளனர்.