பாலிவுட்

படங்களைத் தேர்வு செய்யும் முறை: வித்யா பாலன் பகிர்வு

ஐஏஎன்எஸ்

படங்களைத் தேர்வு செய்யும் முறை குறித்து வித்யா பாலன் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் ஆரம்பித்து தற்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்கிறார் வித்யா பாலன். 'டர்டி பிக்சர்' திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். கடைசியாக இவர் நடிப்பில் 'ஷகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. அதற்கும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது கோவிட்-19 நெருக்கடியால் வித்யா பாலனின் அடுத்த படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:

"நான் ஒரு முடிவு எடுக்கும்போது அது என் தனிப்பட்ட தேர்வு. ஒரு ரசிகையாக இந்தப் படத்தைப் பார்க்க நான் விரும்புவேனா என்றே யோசிப்பேன். முக்கியமாக, இந்தக் கதையை நான் சொல்ல விரும்புகிறேனா என்று யோசிப்பேன். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் அந்தப் படத்தில் நான் நடிப்பேன். மக்கள் படத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நான் கடுமையாக உழைத்து எனது சிறந்த முயற்சியைத் தருவேன்.

எனது திரைப்படங்கள் குறித்து நான் யாருடனும் கலந்தாலோசிக்க மாட்டேன். என் குழுவுடன் கூட பேச மாட்டேன். ஏனென்றால் அந்த நபருடன் (இயக்குநர்), அவரது வாழ்க்கையுடன் நான் சில மாதங்கள் இருக்க வேண்டும். தவறான காரணங்களுக்காக நான் ஒரு படத்தைச் செய்கிறேன் என்றால் அது முடியும் வரை சித்திரவதைதான்.

என் கடந்த காலத்தில் அப்படி நடந்திருக்கிறது. முடிவெடுக்கும் தருணத்தில் நான் என்னை மட்டுமே சார்ந்திருப்பேன். கடைசியில் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்வது மிகக் கடினம். எனவே எனக்குப் பிடித்த ஒன்றாக நான் நடிக்கும் படம் இருக்க வேண்டும். பின், ரசிகர்களுக்கும் அது பிடிக்கும் என நான் எதிர்பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக 'ஷெர்னி' என்ற திரைப்படத்தில் வித்யா பாலன் நடிக்கவுள்ளார். தற்போது நிலவும் கரோனா நெருக்கடி, ஊரடங்கு ஆகியவை முடிந்த பின் ஷெர்னி படப்பிடிப்புத் துவங்கும் என்று கூறுகிறார் வித்யா பாலன்.

SCROLL FOR NEXT