கரண் ஜோஹரின் 'தர்மா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்காக ஜான்வி கபூர், குஞ்சன் சக்ஸேனாவுடன் சில நாட்களைச் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் ஆகஸ்ட் 12 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ படத்தில் வரும் சில காட்சிகளும், வசனங்களும் இந்திய விமானப்படை குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தர்மா புரொடக்ஷன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் ஆகியவற்றுக்கு இந்திய விமானப் படை கடிதம் எழுதியது.
இந்திய விமானப் படையில் பாலின பேதம் இருப்பதாக வரும் காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய விமானப்படையில் சக அதிகாரிகளின் ஆதரவு தனக்கு எப்போதுமே இருந்ததாக குஞ்சன் சக்ஸேனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய விமானப்படையில் எனக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அங்கே இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு இப்போதும் அதே சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவிலான பெண் அதிகாரிகள் இந்திய விமானப்படையில் உருவாகியுள்ளனர். இதை விட மிகப்பெரிய சான்று வேறு எதுவும் தேவையில்லை. அதிகம் மதிக்கப்படும் துறையான இந்திய விமானப்படை மிகுந்து முற்போக்குடன் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. என் சக அதிகாரிகளின் ஆதரவு எப்போதும் எனக்கு இருந்துள்ளது.
இவ்வாறு குஞ்சன் சக்ஸேனா கூறியுள்ளார்.