வருண் தவான் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
2019-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான படம் 'குட் நியூஸ்'. ராஜ் மெஹ்தா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கரீனா கபூர், தில்ஜித் தொஸான்ஜ், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹிரோ யாஷ் ஜோஹர், அருணா பாட்டியா, கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா மற்றும் சாஷாங் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ராஜ் மெஹ்தாவின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படத்தையும் கரண் ஜோஹரே தயாரிக்க முன் வந்துள்ளார்.
'குட் நியூஸ்' போலவே இந்தப் படமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது. இதில் வருண் தவான் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். முன்னதாக, இருவரும் வேறொரு படத்தில் நாயகன் - நாயகியாக நடிக்கவிருந்தார்கள். அந்தப் படம் கைவிடப்பட்டது.
தற்போது ராஜ் மெஹ்தா படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.