பாலிவுட்

‘முகல் - இ - அஸாம்’ வெளியாகி 60 ஆண்டுகள் - ஆஸ்கர் நூலகத்துக்கு சென்ற திரைக்கதை

பிடிஐ

கே. ஆசிப் இயக்கத்தில் 1960ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகல் - இ - அஸாம்’ ப்ரித்விராஜ் கபூர், திலீப்குமார், மதுபாலா என்று மிகப்பெரும் ஆளுமைகள் நடித்த இப்படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. நௌஷாத் இசையில் 12 பாடல்களை இப்படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். முகலாய பேரரசர் அக்பரின் மகன் சலீமுக்கும் அரண்மனை நடனக் கலைஞர் அனார்கலிக்கும் இடையே உருவான காதலை பற்றி பேசுகிறது இப்படம். இன்று வரை சலீம் - அனார்கலி காதலை நினைவு கூறும் இந்திய சினிமாவின் ஒப்பற்ற காவியமாக இருந்துவருகிறது.

கருப்பு வெள்ளை படமான ‘முகல் - இ - அஸாம்’,கடந்த 2004ஆம் ஆண்டு வண்ணமாக மாற்றப்பட்டு, ஒலி - ஒளி டிஜிட்டல் செய்யப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழிலும் ‘அனார்கலி’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது,

இன்றோடு இப்படம் ரிலீஸ் ஆகி 60 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில் இப்படத்தில் திரைக்கதை புத்தகம் ஹாலிவுட்டில் உள்ள ஆஸ்கர் நூலகத்துக்கு சென்றுள்ளது. இயக்குநர் கே.ஆசிப்பின் மகன் அக்பர் ஆசிப் அதை ஆஸ்கர் நூலக நிர்வாகத்திடம் இன்று (05.08.20) வழங்கியுள்ளார்.

தற்போது ‘முகல் - இ - அஸாம்’ திரைக்கதை இந்தி, ரோமன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் அகாடமியின் மார்கரெட் ஹெர்ரிக் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்பர் ஆசிப் கூறியுள்ளதாவது:

‘முகல் - இ - அஸாமின்’ பயணம் இந்திய சினிமாவில் குழுமியிருந்து மிகச்சிறந்த எழுத்தாளர்களின் சொற்களோடு தொடங்கியது. அவர்களின் திரைக்கதையை உலகப் புகழ் பெற்ற ஒரு நூலகத்தில் நிரந்தரமாக பாதுகாத்து வைப்பதே அவர்களுக்கு செய்யும் கவுரவம் என்று நான் கருதினேன்.

மறைந்த என் தந்தை மற்றும் அற்புதமான எழுத்தாளர்களின் உழைப்பினால் உருவான இந்த திரைக்கதையின் மூலம் வருங்கால சந்ததியினர் நிறைய கற்றுக் கொள்ள முடியும். இதை ஏற்றுக்கொண்ட அகாடமியினருக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT