மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹெலன் திரைப்படம், இந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் ரீமேக் ஆகிறது.
வினீத் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'ஹெலன்'. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'ஹெலன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி, அருண் பாண்டியன் தயாரித்து வருகிறார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து வரும் இந்தப் படத்தை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது 'ஹெலன்' இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றி உள்ளார். இதில் அன்னா பென் நடித்த கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை 'ஹெலன்' இயக்குநர் மதுக்குட்டி சேவியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.