சேகர் கபூர் புகழாரம் சூட்டியதற்கு "அமைதியாக இருங்கள், கடந்து செல்வோம்" என்று பதிலளித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான கடைசிப் படமான 'தில் பெச்சாரா', ஜூலை 24-ம் தேதி ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
'தில் பெச்சாரா' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், "நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால், என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்" என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சும் அதோடு இணைந்தது.
தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய செய்தியைப் பகிர்ந்து நடிகரும், இயக்குநருமான சேகர் கபூர் தனது ட்விட்டர் பதிவில், "உங்களுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா ரஹ்மான்? நீங்கள் ஆஸ்கர் விருதைப் பெற்றதுதான். ஆஸ்கர் என்பது பாலிவுட்டுக்கு கானல் நீர் போன்றது. பாலிவுட்டைவிட நீங்கள் அதிக திறமை கொண்டவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது" என்று தெரிவித்தார்.
இயக்குநர் சேகர் கபூரின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான், "இழந்த பணம் திரும்ப வரும், புகழ் திரும்ப வரும். ஆனால், நம் வாழ்வில் முக்கியமான தருணங்கள் திரும்ப வராது. அமைதியாக இருங்கள். கடந்து செல்வோம். நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.