ஹிருத்திக் ரோஷனும், சோனம் கபூரும் யோ யோ ஹனி சிங்கின் ‘தீரே தீரே’ பாடலில் இணைந்து நடித்திருந்தனர். தயாரிப்பாளர் குல்ஷன் குமாரின் நினைவாக ‘ஆஷிக்கி’ (1990) படத்தின் ஹிட் பாடலான ‘தீரே தீரே’வை மறு உருவாக்கம் செய்திருந்தார் யோ யோ ஹனி சிங்.
இந்தப் பாடல் வெளியாகிய இரண்டே வாரத்தில் இரண்டு கோடி ஹிட்களை யூடியூப்பில் அள்ளியது. சோனம் கபூரும், ஹிருத்திக் ரோஷம் இந்தப் பாடல் வெற்றியை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டனர். “அடுத்து என்ன” என்ற ஹிருத்திக்கின் கேள்விக்கு, “இருவரும் சேர்ந்து படம் பண்ணலாமா?” என உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார் சோனம். விரைவில் ஹிருத்திக்-சோனம் ஜோடியைத் திரையில் பார்க்கலாம் என்கிறது பாலிவுட் வட்டாரம்.
எடைப் பிரச்சினை
‘பிகே’ படத்துக்குப் பிறகு ‘தங்கல்’ படத்தில் நடிப்பதற்குத் தயாராகிவிட்டார் ஆமிர் கான். இந்தப் படம் மல்யுத்த வீரர் மஹாவீர் போகாட்டின் வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து எடுக்கப்படுகிறது. போகாட்டின் கதாபாத்திரத்துக்குப் பொருந்துவதற்காக ஆமிர் கான் தன் எடையை 70 கிலோவில் இருந்து 95 கிலோவாக அதிகரித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 25 கிலோ அதிகரித்ததால் இப்போது ஆமிர் உடல் ரீதியான பல பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார். இதனால் மூச்சு விட முடியாமல், நடப்பதற்கும் சிரமப்படுகிறார் ஆமிர். ஒரு கதாபாத்திரத்துக்காக இந்தளவு வருத்திக்கொள்வதை நினைத்து ஆமிர் கான் குடும்பமும், ரசிகர்களும் கவலையில் இருக்கின்றனர். நிதேஷ் திவாரி இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டுக்கு புது ஹீரோ
கபில் ஷர்மா ‘கிஸ் கிஸ் பியார் கரூன்’ படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு நுழையவிருக்கிறார். ‘காமெடி நைட்ஸ் வித் கபில்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை இரண்டு ஆண்டுகளாகத் தயாரித்து, தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார் கபில் ஷர்மா. இந்த நிகழ்ச்சி பெரியளவில் வெற்றியடைய, பாலிவுட்டில் தன் அதிர்ஷ்டத்தை சோதித்துப்பார்க்க முடிவெடுத்தார். அப்பாஸ் - முஸ்தான் கூட்டணி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறது. “முதல் படம் வெளியாவதைப் பற்றி எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை.
நான் வாழ்க்கையில் நீண்ட தூரம் கடந்து வந்துவிட்டேன். நிறைய சாதனைகளைச் செய்துவிட்டேன். அதனால் இப்போது பதற்றமடையத் தேவையில்லை. படத்தின் டிரைலரும், பாடல்களும் என் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கின்றன. பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன் ” என்கிறார் கபீல் ஷர்மா.
2007-ல் ஒரு ரியாலிட்டி ஷோவின் காமெடி போட்டியில் வெற்றிபெற்று தொலைக்காட்சிக்கு நுழைந்தவர் கபில். “இந்தப் படம் வெற்றிபெற்றாலும், நான் ‘காமெடி நைட்ஸ் வித் கபில்’ நிகழ்ச்சியைத் தொடர்வேன். என்னால் படங்கள், தொலைக்காட்சி இரண்டையும் சமாளிக்க முடியும்” என்று சொல்கிறார் கபில்.
‘கிஸ் கிஸ் பியார் கரூன்’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.