பயப்படாமல் அமைதியாக இருங்கள் என்று அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. கரோனா தொடர்பாக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அமிதாப் பச்சனுக்கு நேற்று (ஜூலை 11) தொற்று உறுதி செய்யப்பட்டது. இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமிதாப் பச்சனுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவித்த சில மணித்துளிகளில், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கரோனா தொற்று உறுதியானது. அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் எனப் பலரும் அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் இருவரும் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே அபிஷேக் பச்சன் இன்று (ஜூலை 12) காலை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
"நேற்று, எனக்கும் என் தந்தைக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாங்கள் இருவரும் மிதமான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். தேவையான அதிகாரிகளுக்கு நாங்கள் தகவல் அளித்துள்ளோம். அதுமட்டுமின்றி எங்கள் குடும்பத்தினர், ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மும்பை மாநகராட்சி அதிகாரிகள் எங்களோடு தொடர்பில் உள்ளனர். நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். அனைவரும் பயப்படாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி".
இவ்வாறு அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.