அனுபம் கெரின் தாயார் மற்றும் அவருடைய அண்ணன் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. கரோனா தொடர்பாக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அமிதாப் பச்சனுக்கு நேற்று (ஜூலை 11) தொற்று உறுதி செய்யப்பட்டது. இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் என பலரும் அமிதாப் பச்சன் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே இந்தித் திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகரான அனுபம் கெர் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"என்னுடைய அம்மா துல்ஹரிக்கு மிதமான கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோகிலாபென் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் சகோதரர், என்னுடைய அண்ணி, அவர்களது மகன் ஆகியோர் மிகுந்து கவனத்துடன் இருந்தபோதிலும் மிதமான அறிகுறிகளுடன் அவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பரிசோதனை செய்துகொண்டேன், எனக்குக் கரோனா தொற்று இல்லை. மும்பை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.