பாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு என்று அதிதி ராவ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்துக்குக் காரணம் வாரிசு அரசியல் தான் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் வாரிசு அரசியல் சர்ச்சை உருவானது.
தற்போது வாரிசு அரசியல் தொடர்பாக நடிகை அதிதி ராவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. என் குடும்பத்தினர் பிரபலமாக இருக்கும் துறையில் நான் இருந்தாலும் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கத்தான் செய்யும். எனவே சினிமா துறையில் வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு என்பது இயல்பாகவே கிடைக்கும். ஆனால் அந்த வாய்ப்புக்களை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
என்ன வித்தியாசம் என்றால் நான் கீழே விழுந்தால் அடி பலமாக படும். அவர்கள் விழுந்தால் அடி குறைவாக இருக்கும். இந்த துறையில் என் அம்மா இருந்திருந்தால் நான் விழும்போது அவரும் என்னை தாங்கிப் பிடித்திருப்பார். நான் இப்படித்தான் இந்த விவகாரத்தை பார்க்கிறேன். இதை இப்படியும் சொல்லலாம். என் குடும்பத்தினர் செய்யும் தொழிலில் என் குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை ஈடுபடும்போது மற்றவர்களை அந்த குழந்தை மோசமாகவும் கண்டிப்புடனும் வேலை வாங்கப்படும். என்னுடைய வேலைகளுக்கு நான் தான் பொறுப்பாக இருக்கமுடியும். இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலவில்லை. நல்ல பெயர், மரியாதை இவற்றையெல்லாம் நிச்சயமாக நாம் தான் சம்பாதிக்க வேண்டும்.
நானும் ஒரு படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன். இன்னொரு வாரிசு நடிகரும் ஒரு படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் என்னை பாராட்டுபவர்கள் 'நீ நன்றாக நடிக்கிறாய்' என்பதோடு முடித்து விடுவார்கள். ஆனால் அந்த வாரிசு நடிகருக்கு 'இது சினிமா வரலாற்றிலேயே, உலகத்திலேயே சிறந்த நடிப்பு' என்றெல்லாம் புகழ்கிறார்கள்"
இவ்வாறு அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.