பாலிவுட்

கங்கணாவின் மீது உங்கள் தந்தை செருப்பை வீசினார்: பூஜா பட்டின் பதிவுக்கு கங்கணாவின் சமூக வலைதளக் குழுவினர் கண்டனம்

செய்திப்பிரிவு

இளம் நடிகர் சுஷாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து வாரிசு நடிகர்கள், அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தருபவர்கள் எனப் பலரும் அடுத்தடுத்து விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை தருவதாகவும், வெளியிலிருந்து வரும் கலைஞர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன,

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பட் இயக்கும் திரைப்படம் 'சடக் 2'. இது 1991-ம் ஆண்டு அவர் இயக்கிய 'சடக்' படத்தின் இரண்டாவது பாகம். இதில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் என இருவரும் நடிக்கின்றனர்.

பல்வேறு வாரிசுகள் இணைந்துள்ள இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் குரல் கொடுத்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகை பூஜா பட் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில் தங்கள் குடும்பம் எத்தனை புதிய நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது என்று விவரித்திருந்தார். அதில் நடிகை கங்கணாவின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பூஜா பட்டின் இந்த விளக்கத்துக்கு நடிகை கங்கணாவின் சமூக வலைதளக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கங்கணாவின் அதிகாரபூர்வக் கணக்கான ‘டீம் கங்கணா’ என்ற ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''அன்புள்ள பூஜா. அனுராக் பாசு, கங்கணாவின் திறமையைக் கண்டறிந்தார். நடிகர்களுக்குச் சம்பளம் கொடுப்பதை முகேஷ் பட் விரும்புவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் திறமையானவர்கள் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றன. ஆனால் அதற்காக உங்கள் தந்தை மகேஷ் பட்டுக்கு கங்கணாவின் மீது செருப்பை வீசவும், அவரை ‘பைத்தியம்’ என்று அழைக்கவும், அவரை அவமானப்படுத்தவும் உரிமையில்லை. கங்கணாவை ஒரு துயரமான முடிவு என்று அவர் அறிவித்தார். ஏன் சுஷாந்த் மற்றும் ரியா காதலில் அவர் முதலீடு செய்தார்? இவையெல்லாம் நீங்கள் அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்''.

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT