என்னைப் பெருமைப்பட வைத்துவிட்டீர்கள் என்று டாப்ஸிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் லட்சுமி மஞ்சு.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தப்பட்'. விமர்சனரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் காட்சியமைப்புகள், சொன்ன கருத்துகள் உள்ளிட்ட பல விஷயங்கள் பெரும் விவாதத்தை உண்டாக்கின.
தற்போது கரோனா ஊரடங்கில் 'தப்பட்' படத்தைப் பார்த்துவிட்டு டாப்ஸியைப் பாராட்டியுள்ளார் நடிகை லட்சுமி மஞ்சு.
டாப்ஸியைப் பாராட்டும் விதமாக லட்சுமி மஞ்சு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"2 வாரங்களுக்கு முன்பு 'தப்பட்' படம் பார்த்தேன். இப்படத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை என்னால் எழுத இயலவில்லை. ஒரு இந்தியப் பெண்ணாக, இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக்கூடாது என்று அதிகமாக நிர்பந்திக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டவை அனைத்தையும் இப்படம் என்னைக் கேள்வி கேட்க வைத்தது.
'தப்பட்' படம் பார்க்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் என்னையே அறியாமல் என்னுள் ஒரு பகுதியாக இருப்பதைப் போல உணர்ந்தேன். அவை ஒவ்வொன்றும் கேட்கும் கேள்விகளையே நானும் என்னுள் கேட்டுக் கொண்டிருந்தேன். படத்தைப் பார்த்து முடித்ததும், அதீத நம்பிக்கையுடனும், அதே நேரம் மனவருத்தத்துடனும் இருந்தேன்.
நான் என்னை எப்படிப் பார்க்கிறேன் என்பதையும், என் மீதும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும் எப்படி மரியாதை வைத்திருக்கிறேன் என்பது குறித்தும் இப்படம் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
இதுபோன்ற படங்களில் துணிச்சலுடன் நடிக்கும் டாப்ஸிக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் படத்துக்குப் பின்னால் இருக்கும் பயணத்தை நான் அறிவேன். இதை ஒரு கலையாக மாற்றியதற்கு அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். அனுபவ் சின்ஹா, கதை சொல்லலில் நீங்கள் ஒரு ஆசான். வசனங்கள், திரைக்கதை, என ஒவ்வொன்றும் என்னை அசைத்தன.
உலகம் முழுவதுமுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது. டாப்ஸி, நீங்கள் என்னைப் பெருமைப்பட வைத்துவிட்டீர்கள்".
இவ்வாறு லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.
மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சுவும், டாப்ஸியும் நெருங்கிய தோழிகள். லட்சுமி மஞ்சுவின் இந்தக் கடிதத்துக்கு டாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.