பாலிவுட்

சுஷாந்தின் தற்கொலைக்கு பின் எதுவும் முடிவுக்கு வரவில்லை: மீரா சோப்ரா

செய்திப்பிரிவு

சுஷாந்தின் தற்கொலைக்கு பின் எதுவும் முடிவுக்கு வரவில்லை என்று மீரா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்துக கொண்டார். இது இந்திய திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் வாரிசு அரசியல் சர்ச்சை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு நடிகர்கள் கூட, வாரிசு அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகினரை கடுமையாகச் சாடி கடிதமொன்றை வெளியிட்டார் மீரா சோப்ரா.

தற்போது சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிறு கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் உட்பட பலரும், ஏன் நடிகர்கள் தற்கொலை செய்கிறார்கள்? அவர்களை விளிம்புக்கு கொண்டு செல்வது எது என்ற மௌனத்தை உடைக்க விரும்புகிறோம். இந்த அமைப்பு எப்படி உங்களுக்கு எதிராக செயல்படுகிறது? எப்படி சில இயக்குநர்கள் உணர்வு ரீதியாகவும், இரக்கமற்ற முறையிலும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்? (பக்குவமுள்ள இயக்குநர்கள் அப்படி செய்வதில்லை. ஏனெனில் கல்வி ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது)

நானும் அந்த சூழலில் இருந்துள்ளேன். இப்போதும் அந்த பாதிப்புகளுக்கு ஆளாகிறேன். ஆனால் விஷயம் என்னவென்றால், நீங்கள் இதைப் பற்றி வாய் திறந்தால் எவ்வளவு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்? எத்தனை பேர் உங்களோடு நிற்பார்கள்? சுஷாந்தின் தற்கொலைக்கு பிறகு இது முடிவுக்கு வந்துவிட்டதா? இல்லை.

அனைத்தையும் பற்றிய பயம் உங்களை அந்த முடிவை எடுக்க வைத்துவிடும். இது வேலையை பற்றியது அல்ல, அதைத் தாண்டி பல விஷயங்கள் சினிமாத் துறையில் உள்ளது. இது சுயமரியாதை, கவுரவம், கொள்கைகள், எல்லாவற்றையும் விட மன அமைதியைப் பற்றியது"

இவ்வாறு மீரா சோப்ரா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT