பாலிவுட்

சுஷாந்தின் உடல் எடுத்துச் செல்லப்படும் வீடியோ: புகைப்படக் கலைஞரைச் சாடிய தீபிகா படுகோன்

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்டத்தை வீடியோ எடுத்தவரை நடிகை தீபிகா படுகோன் சாடியுள்ளார்.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பாலிவுட் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மரணத்தைச் சுற்றி பல்வேறு கேள்விகளும், பின்புலம் இல்லாதவர்களை பாலிவுட் எப்படி நடத்துகிறது என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. சுஷாந்தின் மரணத்தால் சங்கிலித் தொடராக தினம் ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளன.

சுஷாந்தின் உடல், மருத்துவமனையிலிருந்து, இறுதிச் சடங்குக்காக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்றை சமீபத்தில் ஒரு புகைப்படக் கலைஞர் பகிர்ந்திருந்தார். அதன் கீழ், எனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எனது அனுமதி இல்லாமல் யாரும் எந்தத் தளத்திலும் பதிவிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் குறிப்பைப் பார்த்து கோபம் கொண்ட தீபிகா, அந்தப் பகிர்வின் கீழ், "அது சரி. ஆனால் சுஷாந்தின், அவரது குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் இந்த வீடியோவை எடுத்ததும், அதை வைத்துப் பணம் சம்பாதித்ததும் உங்களுக்குச் சரியாக இருக்கிறதா" என்று கருத்துப் பதிவிட்டுள்ளார். தீபிகாவின் இந்தப் பதிவு பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

முன்னதாக, மன அழுத்தத்தால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று நம்பப்படுவதால். நடிகை தீபிகா படுகோன், மனநலம் குறித்த விழிப்புணர்வை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT