நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கு, நினைவுப் பக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்தது இவர்தான். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
சுஷாந்தின் மறைவுக்கு இன்று வரை பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வந்தவர். இப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கம், அவரது மறைவுக்குப் பின் நினைவுப் பக்கமாக (memorialized) மாற்றப்பட்டுள்ளது.
பிரபலங்கள் இறந்த பிறகு அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் அவர்கள் நினைவாக அப்படியே எந்த மாற்றமும் செய்யப்படாமல் வைக்கப்படும். அவர்களது பெயருக்குப் பக்கத்தில் "நினைவில் கொள்கிறோம்" (remembering) என்று குறிப்பிட்டிருக்கும்.
இப்படி நினைவுப் பக்கமாக மாற்றப்பட்ட பிறகு, ஏற்கெனவே அதில் இருக்கும் எந்தத் தகவல்களையும், பதிவுகளையும் மாற்ற முடியாது. அவர்கள் பகிர்ந்த எந்தப் பதிவும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கும். அவை யாருடன் பகிரப்பட்டனவோ அதுவும் அப்படியே இருக்கும். இந்த அம்சம் கடந்த மாதம் தான் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.