இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹரும் அவரது நிறுவனமும் சுஷாந்தின் வாய்ப்புகளை முடக்கியதாகவும் ஒருதரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர், கரண் ஜோஹர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜியா கான் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தாயார் ராபியா கான் நடிகர் சல்மான கான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை தற்போது முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து ஒரு வீடியோவில் ராபியா கான் கூறியிருப்பதாவது:
''சுஷாந்தின் மறைவு எனது மகளின் மரணத்தின்போது நடந்த ஒரு சம்பவத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. அப்போது நான் லண்டனில் இருந்தேன். ஒரு சிபிஐ அதிகாரி என்னைத் தொலைபேசியில் அழைத்து இந்தியா வரச் சொன்னார். நான் அவரைச் சந்திப்பதற்காக இந்தியா வந்திறங்கினேன். நான் இங்கு வந்ததும் அவர் என்னிடம் ‘சல்மான் கான் தினமும் எனக்கு போன் செய்து தான் ஒரு படத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாகக் கூறுகிறார். அந்தப் பையனை (சூரஜ்) துன்புறுத்த வேண்டாம். அவரைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று சல்மான் கான் கூறுகிறார். நாங்கள் என்ன செய்வது மேடம்?’ என்று அவர் என்னிடம் கூறினார். அந்த அதிகாரி மிகவும் குழப்பநிலையில் இருந்தார்.
சுஷாந்த் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இது விளையாட்டல்ல. பாலிவுட் மாறவேண்டும். பாலிவுட் உலகம் விழிப்படைய வேண்டும். பிறரைத் துன்புறுத்துவதை முற்றிலுமாகக் கைவிடவேண்டும். அதுவும் ஒருவகையில் பிறரைக் கொல்வது போலத்தான்''.
இவ்வாறு ராபியா கான் கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகை ஜியா கான் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஜியா கானின் காதலரான சூரஜ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.