ஊடகங்களில் வரும் செய்திகளுக்கென சில விதிகள் இருக்க வேண்டும் என்றும், கிசுகிசுக்கள் போன்றவை சட்டவிரோதமாக்கப் பட வேண்டும் என்றும் நடிகை கிருத்தி சனோன் கடுமையாக சாடிப் பதிவிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராப்தா’ திரைப்படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக நடித்தவர் கிருத்தி சனோன். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுஷாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சனோன் சுஷாந்தின் மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்போது ஊடக அறம் குறித்து, ஊடகத்தினர் நடந்து கொள்வது குறித்தும் கடுமையாகச் சாடி நீண்ட பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன் தமிழாக்கம்:
"எப்போதும் உங்களைப் பற்றிக் கிண்டல் செய்யும், கிசுகிசு பேசும் உலகம், திடீரென உங்கள் மறைவுக்குப் பின் உங்களின் நல்ல குணங்களைப் பற்றிப் பேசுவது விந்தையாக இருக்கிறது. சமூக ஊடகம் தான் இருப்பதிலேயே போலியான, நச்சுத்தன்மையுள்ள இடம். ஆன்மா சாந்தியடையட்டும் என்று இரங்கல் தெரிவிக்கவில்லை என்றாலோ, பொதுவில் எதுவும் சொல்லவில்லை என்றாலோ, உங்களுக்குத் துயரம் இல்லை என்று அர்த்தம். ஆனால் உண்மையில் அப்படிச் சொல்லாதவர்கள்தான் நிஜமாகவே துயரத்தில் வாடுவார்கள். சமூக ஊடகம்தான் புதிய, யதார்த்தமாகவும், யதார்த்த உலகம் போலியாகவும் மாறிவிட்டதைப் போலத் தெரிகிறது.
சில ஊடகத்தினர் தங்களின் நோக்கம், உணர்ச்சி ஆகியவற்றை மொத்தமாக இழந்துவிட்டிருக்கின்றனர். இதுபோன்ற நேரத்தில் அவர்கள் உங்களைக் கேட்பதெல்லாம் நேரலையில் வர முடியுமா, கருத்துச் சொல்ல முடியுமா என்பதே. உண்மையிலேயே உங்களுக்குப் புரியவில்லையா?
கார் கண்ணாடியைத் தட்டி, 'மேடம் கண்ணாடியைக் கீழே இறக்குங்கள்' என்கிறார்கள். எதற்காக? இறுதிச் சடங்குக்குப் போகும் ஒருவரது புகைப்படத்தைத் தெளிவாக எடுப்பதற்காக. இறுதிச் சடங்குக்குச் செல்வது என்பது ஒருவரது தனிப்பட்ட நிகழ்வு. நமது தொழிலை விட மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் தருவோம்.
ஊடகங்கள் அந்நிகழ்வில் இருக்க வேண்டாம் அல்லது சற்று தூரத்தையும் கண்ணியத்தையும் பேணுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அந்த பளபளப்பான நட்சத்திர அந்தஸ்து, கவர்ச்சி எல்லாவற்றுக்கும் பின்னாடி இருக்கும் நாங்கள் சாதாரண மனிதர்களே. உங்களைப் போலவே எங்களுக்கும் உணர்வுகள் உண்டு. அதை மறக்காதீர்கள்.
இதழியலுக்கென சில விதிகள் இருக்க வேண்டும். எவற்றை ஏற்றுக்கொள்ள முடியும், எவற்றை முடியாது, இது இதழியலின் கீழ் வரும் என்பதை யாராவது விளக்க வேண்டும். ' இது உங்கள் வேலை இல்லை', 'வாழு வாழ விடு' ஆகியவை எதன்கீழ் வரும் என்பதைச் சொல்ல வேண்டும்.
பெயரற்ற கிசுகிசுக்கள் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும். தடை செய்யப்பட வேண்டும். அவ மனநல ரீதியிலான கொடுமையின் கீழ் வர வேண்டும். ஒன்று அதற்கான ஆதாரத்தை வைத்துக் கொள்ளுங்கள். பெயரைக் குறிப்பிட்டு எழுதும் அளவுக்குத் துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள். அல்லது எழுதவே எழுதாதீர்கள். வதந்தி என்று எழுதிவிட்டு அதை இதழியல் என்கிறீர்கள். ஆனால் அது ஒருவரது மனதை, வாழ்க்கையை, குடும்பத்தை எப்படி மோசமாகப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஒரு பட்சி சொல்லியது என்று எழுதுவது எப்போதும் சரியானதல்ல.
இந்த பழி போடும் ஆட்டம் நிற்கவே நிற்காது. யாரைப் பற்றியும் தவறாகப் பேசவே பேசாதீர்கள். கிசுகிசுக்களை நிறுத்துங்கள். உங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும், உங்கள் கருத்துதான் உண்மையென்றும் நினைப்பதை நிறுத்துங்கள். எல்லோருமே போராட்டத்தில் இருக்கின்றனர். அதைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது.
எனவே, உங்கள் தரப்பிலிருந்து வரும் எந்த எதிர்மறைச் சிந்தனையும், கிண்டலும், கிசுகிசுவும், உங்களைப் பற்றித்தான் சொல்லுமே தவிர நீங்கள் பேசும் நபரைப் பற்றிச் சொல்லாது. எங்களில் பெரும்பாலானவர்கள் அதைப் புறக்கணிக்கிறோம், கண்டுகொள்ளாமல் விடுகிறோம். ஆனாலும் அது எங்கள் ஆழ்மனதைப் பாதிக்கும்.
அழ வேண்டாம், வலிமையாக இரு போன்ற பதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அழுவது பலவீனத்தின் அறிகுறியல்ல. எனவே மனம் விட்டு அழுங்கள். வேண்டுமென்றால் கத்துங்கள். நீங்கள் உணரும் அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். நமக்குப் பிரச்சினை வருவது சகஜம்தான். ஆனால் அதைப் பற்றி, உங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் ஒருவரிடம் சொல்லுங்கள். ரணம் ஆற நேரமெடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்துடன், உங்களை உண்மையில் நேசிக்கும், அக்கறை செலுத்தும் நபர்களிடம் இருங்கள். அவர்களைப் போக விடாதீர்கள். அவர்கள் தான் உங்கள் பலம். என்ன நடந்தாலும் அவர்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள். எனவே அவர்கள் உங்களைச் சுற்றி இருக்கட்டும்.
வாழ்க்கையில் தனியாகப் போராடும் அளவுக்கு யாருமே வலிமையானவர் இல்லை".
இவ்வாறு கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார்.