பாலிவுட்

என்னுடைய ஒரு பகுதி உன்னுடனே சென்றுவிட்டது: சுஷாந்த் குறித்து கிருத்தி சனோன் உருக்கமான பதிவு

பிடிஐ

சுஷாந்த் மறைவு குறித்து நடிகை கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராப்தா’ திரைப்படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக நடித்தவர் கிருத்தி சனோன். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுஷாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவர் சுஷாந்த மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''சுஷாந்த்.. உனது புத்திசாலித்தமான மூளைதான் உனது சிறந்த நண்பன் மற்றும் மோசமான எதிரி என்று எனக்குத் தெரியும். ஆனால் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைக்கும் தருணம் ஒன்றை நீ உன் வாழ்க்கையில் அடைந்துவிட்டாய் என்று தெரிந்தபோது நான் உடைந்துவிட்டேன்.

அந்தத் தருணத்தைக் கடக்க உன்னுடன் மனிதர்கள் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உன்னை நேசித்தவர்களை நீ விலக்கியிருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். உனக்குள் உடைந்த ஒன்றை நான் சரிசெய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. என்னுடைய ஒரு பகுதி உன்னுடனே சென்றுவிட்டது. இன்னொரு பகுதி எப்போதும் உன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும். எப்போதும் உன்னுடைய மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்வதை நிறுத்தியதில்லை. இனிமேலும் நிறுத்தப்போவதும் இல்லை''.

இவ்வாறு கிருத்தி சனோன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT