சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மைத்துனர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று (14.06.20) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.
இந்நிலையில், ஹரியாணாவில் கூடுதல் டிஜிபியாகவும், ஹரியாணா முதல்வரின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வரும் சுஷாந்தின் மைத்துனர் ஓ.பி சிங், அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த தற்கொலை பற்றிக் கேள்விப்பட்டவுடன் ஓ.பி சிங் மும்பை விரைந்ததாக அவரது சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்தின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ஹரியாணா முதல்வர் மனோஹர் லால் கட்டார், ''திரைத்துறைக்கு மட்டுமல்லாது மொத்த சமூகத்துக்குமே இது ஈடுசெய்ய முடியாத இழப்பு'' என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை கதை உட்பட பல்வேறு திரைப் படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மும்பை பாந்த்ராவில் உள்ள இல்லத்தில் அவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீஸார், சுஷாந்த் சிங் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.