பாலிவுட்

ரசிகரின் பெயரில் ரூ.1 கோடி நிதி: கேரள வெள்ளத்தின்போது சுஷாந்தின் தாராளம்

செய்திப்பிரிவு

2018-ம் ஆண்டு கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத பெரும் வெள்ளம் மாநிலத்தைப் புரட்டிப் போட்டபோது, சுஷாந்த் சிங் ராஜ்புத் அதற்கு நிதி அளித்தார்.

ஆகஸ்ட் 21, 2018 அன்று, சுஷாந்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுபம் ரஞ்சன் என்ற ரசிகர், கேரள வெள்ளத்துக்கு நிதி அளிக்க மனமிருந்தாலும் தன்னிடம் பணம் இல்லை என்று கருத்துப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த சுஷாந்த், "உங்கள் பெயரில் ரூ.1 கோடியை நான் கொடுக்கிறேன். அங்கிருக்கும் நம் நண்பர்களுக்கு அது நேரடியாகச் சென்று சேர்கிறது என்பதை உறுதி செய்யுங்கள்" என்று பதில் அளித்திருந்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் சுஷாந்த், தான் அளித்த நிதி பற்றிய விவரங்களை, ரசீதுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்தார். "எனது நண்பர் சுபம் ரஞ்சனுக்கு வாக்குறுதி அளித்ததின் பேரில், அவர் என்ன செய்ய நினைத்தாரோ அதைச் செய்துவிட்டேன். என்னைச் செய்ய வைத்தது நீங்கள்தான் (ரஞ்சன்). அதனால் உங்களை நினைத்துப் பெருமை கொள்ளுங்கள். என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்திருக்கிறீர்கள்" என்று அந்தப் பதிவுடன் சுஷாந்த் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சுஷாந்த் நேற்று தற்கொலை செய்துகொண்டார். மன அழுத்தமே அவர் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

சுஷாந்தின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்ததோடு, சுஷாந்தின் பங்களிப்பு குறித்தும் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த வெள்ளத்தின்போது களத்தில் தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டிருந்த ஆர்யா சுரேஷ் என்பவர், தான் சுஷாந்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் எப்படி உடனடியாகப் பதிலளித்தார் என்பதை நினைவுபடுத்துகிறார்.

"சுஷாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிவாரணம் தொடர்பான தொலைபேசி எண்களை அடிக்கடி பகிர்ந்து, அதற்கு தானம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தார். நிவாரணப் பொருட்களையும் அவர் அனுப்பி வைத்தார். எனவே சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வேண்டும் என்று அவரது பதிவில் நான் கேட்டிருந்தேன். அவர் உடனடியாக அதற்குப் பதிலளித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அந்த நாட்களில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து இயங்கி வந்தார். ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளித்தார்" என்று ஆர்யா சுரேஷ் கூறினார்.

மேலும், கேரள வெள்ளப் பிரச்சினைக்கு ஒரு மாதத்துக்குப் பின் நாகாலாந்து பகுதியை வெள்ளம் தாக்கியபோது, அந்த மாநிலத்துக்கும் சுஷாந்த் ரூ.1.25 கோடியை நிதியாக அளித்தார்.

SCROLL FOR NEXT