பாலிவுட்

கரோனா தொற்று குணமடையாத நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகை

ஐஏஎன்எஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பிரபல சீரியல் நடிகை மோஹனா குமாரியின் தந்தையுமான சத்பால் மஹராஜுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

அதன்பிறகு மோஹனா குமாரி மற்றும் அவருடைய கணவர் சுயேஷ் ராவத், அவருடைய மாமியார் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் கரோனா தொற்று குணமாகாத நிலையில் நடிகை மோஹனா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மோஹனா குமாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாங்கள் வீடு திரும்பிவிட்டோம். ஆனால் எங்கள் அனைவருக்கும் இன்னும் கரோனா தொற்று குணமடையவில்லை. நாங்கள் முற்றிலுமாக தனிமையில் இருக்கிறோம். இது சரியாக எத்தனை நாள் எடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் மொத்தம் 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். ஆனால் அதற்கு 5 நாட்களுக்கு முன்பே எனக்கு அறிகுறிகள் தென்பட்டன.

இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வைரஸை நாங்கள் வெல்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது. அதுவரை விதிமுறைகள் நாங்கள் கண்டிப்பான முறையில் பின்பற்றவுள்ளோம். மற்றபடி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நாங்கள் நலமுடன் இருக்கிறோம். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT