லுங்கி டான்ஸை கண்டுபிடித்தது நட்டி தான் என்று இயக்குநர் ஷூஜித் சிர்கார் தெரிவித்துள்ளார்.
இந்தித் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் நட்டி (எ) நட்ராஜ். தமிழ், தெலுங்கில் சில படங்களுக்கே ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரும், இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாகத் திரையுலகில் அறிமுகமானார்கள்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ளாக் ஃப்ரைடே' படத்துக்கு நட்ராஜ் தான் ஒளிப்பதிவாளர். அந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. சில தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளத்தில் அனுராக் கஷ்யாப்பை கடுமையாக விமர்சித்து சில பதிவுகளை வெளியிட்டார் நட்டி. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
ஆனால், நட்டிக்கு பதிலளிக்கும் விதமாக அனுராக் கஷ்யாப் வெளியிட்ட பதிவில் அவர் தனக்கு ஆசான் எனவும், அவரிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். இதனால் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது நட்டிக்கு பதிலளிக்கும் விதமாக அனுராக் கஷ்யாப் வெளியிட்ட ட்வீட்களை மேற்கோளிட்டு இயக்குநர் ஷூஜித் சிர்கார் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
"எங்கள் போராட்டங்களில் நட்டிக்கு முக்கியமான பங்குண்டு. நானும் நட்டி நட்ராஜும் ஒரே நேரத்தில் ஒன்றாகத்தான் எங்கள் திரைப் பயணத்தைத் தொடங்கினோம். லுங்கி டான்ஸை உண்மையில் கண்டுபிடித்தது நட்டி தான்"
இவ்வாறு ஷூஜித் சிர்கார் தெரிவித்துள்ளார்.
இந்தித் திரையுலகில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானது லுங்கி டான்ஸ் பாடல் மற்றும் நடனம். தற்போது அந்த நடனத்தையே கண்டுபிடித்தவர் நட்டி தான் என்று ஷூஜித் சிர்கார் குறிப்பிட்டு இருப்பது நினைவு கூரத்தக்கது.