‘ராக்கெட்ரி’ மற்றும் 'பிரம்மாஸ்த்ரா' ஆகிய இரு படங்களில் ஷாரூக் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான படம் ‘ஜீரோ’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. இதற்குப் பிறகு 'லயன் கிங்' படத்தின் இந்தி டப்பிங்கில், தனது மகனுடன் இணைந்து குரல் கொடுத்ததைத் தாண்டி இன்று வரை ஷாரூக் கான் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி ‘ராக்கெட்ரி’ என்ற படத்தை மாதவன் இயக்கி வருகிறார். இதில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிரம்மாஸ்த்ரா' படத்திலும் ஷாரூக் கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகிறது.