‘கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும்’- அதீத அதிர்ஷ்டத்தைக் குறிக்க இப்படிச் சொல்லப்படுவது வழக்கம். பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை, சமையலயறைக் குழாய்க்கு அடியிலிருந்தும் சாக்கடையுடன் கொப்பளித்துக்கொண்டு வரலாம். அப்படி ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணிடம் பணம் கிடைத்தால், அதை யாருக்கும் தெரியாமல் அவள் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நினைத்தால்... என்னவாகும் என்பதுதான் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சோக்டு: பைசா போல்தா ஹை’ படத்தின் கதை.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேற்று (ஜூன் 5) வெளியாகியுள்ள இத்திரைப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசினாலும், எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தியாக இல்லை என்று சிலர் விமர்சிக்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி, இந்தப் படம் பேச முயன்றுள்ள அரசியலும் வாழ்வியலும் அதிகம் பேசப்படாதவை என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
வீட்டில் ஓர் அலிபாபா குகை
2016-ல் ஒரே இரவில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. மும்பையில் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவள் சரிதா. வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் அவளது கணவன் சுஷாந்த் மற்றும் பள்ளிக்குச் செல்லும் அவர்களது மகன். இதுதான் சரிதாவின் வாழ்க்கை. கணவன் வேலைக்குச் செல்லவில்லையென்றாலும் சரிதாவின் வங்கிப் பணி அவர்களது வாழ்க்கையை ஓட்ட உதவியாக இருக்கும். ஆனாலும், பணப்பற்றாக்குறை ஏதாவது ஒரு விதத்தில் அவர்களைத் துரத்திய வண்ணமே இருக்கும்.
இப்படியான சூழலில், சரிதா குடியிருக்கும் வீட்டிற்கு மேற்தளத்தில் ஓர் அரசியல்வாதியின் உதவியாளர் அவரது வீட்டுக் குழாயில் பதுக்கிவைக்கும் முறைகேடான பணம், சரிதா வீட்டின் சமையலறையின் குழாயின் கீழ் இருந்து சாக்கடையுடன் பொங்கிவர ஆரம்பிக்கும். பணக்கஷ்டத்தில் உழன்றுகொண்டிருக்கும் சரிதா, அற்புதக் குகையைக் கண்டடைந்த அலிபாபா போல் மாறிவிடுவாள். தினமும் இரவு தன் சமையலறையில் சாக்கடையிலிருந்து, அழகாக பாலித்தீன் கவரில் சுருட்டபட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து, வீட்டின் பல மூலைகளில் பதுக்கிவைக்க ஆரம்பிப்பாள். சிரமங்கள் தீரப்போகிறது என்று அவள் சற்று ஆசுவாசமடையும் நேரத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலுக்கு வரும். இடிந்து போகும் சரிதாவுக்கு வங்கியிலும் வேலைப்பளு கூடும்.
சிறிது நாட்களில் சரிதாவின் பணம் கக்கும் குழாயிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளும் வர ஆரம்பிக்கும். எல்லாம் மேல்வீட்டில் குடியிருக்கும் அரசியல்வாதியின் கைங்கரியம். இந்நிலையில் சரிதாவின் மொத்த பணமும் பறிபோகும் சூழல் வரும். இதற்கிடையில் சரிதாவின் மனதைப் பெரிதும் பாதித்த ஒரு சம்பவத்தின் நிழலும் அவளைத் துரத்தும். இவற்றிலிருந்து அவள் மீண்டாளா, தன் குடும்பத்தைக் காப்பாற்றினாளா என்பதே படத்தின் கதை.
ஒற்றைக் காட்சியில் முத்திரை
ஒரு குடும்பம், ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு, ஒரு வங்கி என்ற சில விஷயங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, தேசிய அளவில் தாக்கம் செலுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பற்றிப் பேச முயற்சி செய்திருக்கிறார் அனுராக். நிகித் பாவே எழுதிய திரைக்கதையும் வசனங்களும் படத்தின் கருவுக்கு வலு சேர்க்கின்றன. பணமதிப்பு நீக்கம் நடந்து நான்கு வருடங்கள் ஆன பின்பும் அந்த நேரத்திலிருந்த மக்களின் அறியாமையை எள்ளி நகையாட அனுராக் தவறவில்லை. பணமதிப்பு நீக்கம் குறித்து தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் மோடி அறிவிப்பதை சரிதா, சுஷாந்துடன் கீழ் வீட்டில் குடியிருக்கும் பெண்மணி பார்க்கும் ஒற்றைக் காட்சியில், அந்நடவடிக்கை குடும்பத் தலைவிகளை எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதைத் துல்லியமாகக் காட்டியிருக்கிறார் அனுராக்.
குடும்பத் தலைவிகளின் துயரம்
இந்தியச் சமூக அமைப்பு பலம் பொருந்திய பணக்காரர்கள், இழுபறிகள் நிறைந்த நடுத்தர வர்க்கத்தினர், அடுத்த வேளை சோறு நிச்சயமில்லாத விளிம்பு நிலை மக்கள் என்ற வித்தியாசத்தின் குடையின் கீழ் அமைந்துள்ளது. பணமதிப்பு நீக்கம் என்ற பெரும் பொருளாதார நடவடிக்கை, இந்த மூன்று சமூக அடுக்குகளிலும் வெவ்வேறு வகையான தாக்கங்களை ஏற்படுத்தியது. கறுப்புப் பணத்தைப் பதுக்கிக் கொழுத்த பண முதலைகளுக்கு எதிராகத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், நிதர்சனத்தில் நடுத்தர வர்க்க மற்றும் விளிம்பு நிலை மக்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய வடு மிகவும் ஆழமானது.
ஆனால், இந்நடவடிக்கையின் விளைவுகளைப் பற்றியோ, அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்கள் எப்படி கள்ளத்தனமாக புதிய நோட்டுகளை உடனே பெற்றார்கள் என்பதைப் பற்றியோ பேசாமல், ஒரு நடுத்தரவர்க்கப் பெண்ணின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை மட்டுமே இப்படம் பிரதானமாகப் பேசுகிறது.
முதல் பாதி முழுக்க சரிதாவின் வாழ்க்கைக்குள் நம்மை ஈர்த்துச் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் சில இடங்களில் தொய்வடைவதைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. உலகமே உற்று நோக்கிய ஒரு நடவடிக்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படத்தில் அந்த விஷயத்தின் தீவிரம் உணர்த்தப்படாமல், புதிர் நிறைந்த திரைக்கதை மட்டுமே எஞ்சி நிற்பது பெரும் குறை.
அபாரமான நடிப்பு
பல்வேறு குறைகளைத் தாண்டி, படத்தில் பங்கேற்றிருக்கும் நடிகர்களின் அபாரமான நடிப்பு நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகிறது. சரிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சையாமி கெர், பாலிவுட்டின் வழக்கமான கதாநாயகிகளிடம் இருந்து தனித்துத் தெரிகிறார். இவர் ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் ‘பிளாக் ஆப்ஸ்’ தொடரிலும் தன் திறமையை நிரூபித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருங்கால ஓடிடி தளங்களில் இவரின் நடிப்பு கண்டிப்பாக மேலும் கவனிக்கப்படும்.
சரிதாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஷன் மேத்யூ ஆங்காங்கே தமிழ் பேசியும் அசத்தியுள்ளார். கீழ் வீட்டுக்காரப் பெண்மணி, சுஷாந்தின் நண்பன் என்று அனைத்துக் கதாபாத்திரத் தேர்வும் கச்சிதம். நடிகர்களிடமிருந்து தேவையான நடிப்பை வாங்கும் தன் திறமையை மேலும் ஒருமுறை அனுராக் நிரூபித்துள்ளார்.
உலக அரங்கில் இந்திய சினிமாவின் அடையாளமாக இருப்பவர் அனுராக். அவரின் முந்தைய பல படங்கள் ‘கல்ட்’ அந்தஸ்தை அடைந்தவை. எனினும் அந்த வரிசையில் ‘சோக்டு: பைசா போல்தா ஹை’ படத்தை வைக்க முடியுமா என்பது சந்தேகமே!
-- க.விக்னேஷ்வரன்