ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள புதிய தொடர் ‘ட்ரிபிள் எக்ஸ் -2’. இணையத்தில் வெளியான இத்தொடருக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் ராணுவ வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தியாகிகள் நல அறக்கட்டளை தலைவரும் முன்னாள் ராணுவ வீரருமான மேஜர் டி.சி.ராவ் கூறியிருப்பதாவது:
''ராணுவ வீரர்கள் இந்த நாட்டுக்காக உயிர்த் தியாகங்களைச் செய்து வருகிறார்கள். ஆனால், இந்தத் தொடரின் தயாரிப்பாளரும் இயக்குநரும் இந்தத் தொடரில் ராணுவ வீரர்களின் குடும்பப் பெண்களைத் தவறான முறையில் சித்தரித்துள்ளனர். இது ராணுவத்தினரை அவமதிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்துக்குரியது.
இதுதவிர சீருடையில் இருக்கும் ராணுவ வீரர்களை அவமதிப்பது போல பல காட்சிகளும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. அந்தக் காட்சிகளை ஏக்தா கபூர் நீக்கவில்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்''.
இவ்வாறு மேஜர் டி.சி.ராவ் கூறியுள்ளார்.