கங்கணா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டெல் கட்டுப்படுத்தும் பக்கம் என்று புதிதாக ஒரு ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதில் தப்லீக் ஜமாத் பற்றி கடுமையாகச் சாடி கருத்துப் பகிரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மத ரீதியாக சர்ச்சைக் கருத்துகள் தெரிவித்ததற்காக ரங்கோலி சாண்டெலின் கணக்கை ட்விட்டர் தரப்பு முடக்கியது. தற்போது ரங்கோலி சாண்டெல் பெயரில் @KillBillBride என்ற புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் ரங்கோலி சாண்டெல், நடிகை கங்கணா ரணாவத்தின் மேலாளர், செய்தித் தொடர்பாளர் என்று அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ரங்கோலியின் புகைப்படமே ப்ரொஃபைல் படமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கிலிருந்து வியாழக்கிழமை தப்லீக் ஜமாத் தரப்பைக் கடுமையாகச் சாடி கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 960 பேர் அடுத்த 10 வருடங்கள் இந்தியாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் பகிர்ந்து, "ஏன் இந்தியா மட்டும். தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி அவர்களைத் தடுக்க வேண்டும்.
அவர்கள் புழுக்களை விட மோசமானவர்கள். அவர்களுக்கு உதவ வரும் காவல்துறையினர், மருத்துவர்கள் மீது உமிழ்வார்கள். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும். அவர்களை உடனடியாக வெளியே தூக்கி வீசுங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் கரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தபோது, சமூக விலகல் விதிகளை மதிக்காமல் கோவிட்-19 தொற்றை அதிக அளவில் பரப்பினார்கள் என தப்லீக் ஜமாத் தரப்பு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.