பாலிவுட்

ரஜினி குறித்த கேலி ஏன்?-இந்தி சீரியல் நடிகர் விளக்கம்

செய்திப்பிரிவு

இந்தி தொலைக்காட்சி நடிகர் ரோஹித் ராய். ‘தேஸ் மெய்ன் நிகிலா ஹோகா சந்த்’, ‘ஸ்வபிமான்’ உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமாக அறியப்படுபவர். இது தவிர ‘காபில்’, ‘ஏக் கிலாடி ஏக் ஹஸீனா ’, ‘அபார்ட்மெண்ட்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், ''ரஜினிகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது'' என்று கிண்டலாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப் படத்தோடு, ''கரோனாவை அடக்குவோம். வேலைக்குச் செல்லும்போது கவனமாக இருங்கள். முகக் கவசம் அணிந்து ஒரு நாளைக்கு பல முறை கைகளைக் கழுவுங்கள். நாம் அனுமதிக்காத வரை இந்த வைரஸால் நம்மை நெருங்க முடியாது'' என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், அவரது இந்தப் பதிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது பதிவைப் பகிர்ந்து பலரும் ரோஹித் ராய்க்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லவரும்போது ஏன் சம்பந்தமே இல்லாமல் ரஜினிகாந்தை கேலி செய்ய வேண்டும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு விளக்கமளித்துள்ள ரோஹித் ராய் கூறியுள்ளதாவது:

''அமைதியாக இருங்கள் நண்பர்களே! இது ஒரு நகைச்சுவை மட்டுமே. இது எதிர்மறையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. உங்களைச் சிரிக்கவைக்கவே அப்படிச் செய்தேன். விமர்சிக்கும் முன் நான் அதை எதற்காகப் பகிர்ந்திருந்தேன் என்று பாருங்கள்''.

இவ்வாறு ரோஹித் ராய் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT