கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா, சின்னத்திரை என அனைத்து விதமான படப்பிடிப்புகளும் முடங்கிப் போயுள்ளன.
படப்பிடிப்புகள் நடக்காததால் பலர் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தி சின்னத்திரையை நம்பியிருக்கும் தினக்கூலிப் பணியாளர்கள், பல சிறு நடிகர்களும் இதனால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். தற்போது 'பெகுசராய்' என்ற தொடரில் நடித்து வரும் ராஜேஷ் கரீர் என்ற நடிகர் உணர்ச்சிகரமான காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் அவர் நிதியுதவி கேட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ராஜேஷ், "நான் ராஜேஷ் கரீர். நான் ஒரு நடிகன். எனது நண்பர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள் என நம்புகிறேன். இப்போது நான் வெட்கப்பட்டால் என் வாழ்க்கை கடினமாகிவிடும். நான் உதவி தேவைப்படும் சூழலில் இருக்கிறேன். அதனால் உங்களிடம் கோருகிறேன். என் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. 300-400 ரூபாயை எனக்குத் தந்து உதவுங்கள் என தாழ்மையாக வேண்டுகோள் வைக்கிறேன். உங்களால் இவ்வளவு உதவி செய்ய முடிந்தால் போதும்.
படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வேலை கிடைக்குமா என்று தெரியாது. என் வாழ்க்கை ஸ்தமித்திருக்கிறது. எனக்கு எதுவும் புரியவில்லை. நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று ராஜேஷ் கூறியுள்ளார்.
கடந்த 15-16 வருடங்களாக மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் ராஜேஷ். தனக்குக் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு, பஞ்சாபுக்குச் சென்று வேறு எதாவது வேலை தேடப்போவதாக ராஜேஷ் கூறியுள்ளார்.