நடிகர் அஜய் தேவ்கன், தாராவியில் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், இரண்டு வென்டிலேட்டர்களையும் அளித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக அறியப்படும் தாராவியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியிலிருந்து மட்டும் 1,500 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தற்காலிகமாக மருத்துவமனை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனைக்காக தனது அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக, நடிகர் அஜய் தேவ்கன் பங்களிப்பு செய்துள்ளார். முன்னதாக தாராவியில் இருக்கும் 700 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களும், மருத்துவப் பொருட்களையும் அஜய் தேவ்கன் தானமாக வழங்கியிருந்தார்.
தற்போது 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், இரண்டு வென்டிலேட்டர்களையும் அளித்துள்ளார்.
"கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கான மையப்பகுதியில் தாராவி இருக்கிறது. மாநகராட்சியின் உதவியோடு எண்ணற்ற குடிமக்களும், தன்னார்வ அமைப்புகளும் களத்தில் அயராது உழைத்து வருகின்றன. தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் பொருட்களையும், சுகாதாரப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக நாங்கள் 700 குடும்பங்களுக்கு உதவுகிறோம். நீங்களும் தானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அஜய் தேவ்கன் ட்வீட் செய்திருந்தார்.
மேலும், திரைத்துறையைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்களின் நலனுக்காக, மேற்கிந்திய திரைப்பட ஊழியர்கள் அமைப்புக்கு ரூ.51 லட்சத்தை நன்கொடையாக அஜய் தேவ்கன் வழங்கியுள்ளார்.