கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அக்ஷய் குமார் டெல்லியில் இருக்கும் தனது சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகளையும் மும்பைக்கு அழைத்துவர தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வந்தது. சில செய்தி ஊடகங்கள் கூட இந்தச் செய்தியைப் பிரசுரித்தன.
இதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் காலில் செருப்பு கூட இல்லாமல் பல கி.மீ. தூரம் நடந்து செல்லும் இந்தச் சூழலில் இரண்டும் பேருக்காக தனி விமானமா என்று பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர்.
இந்நிலையில் இது முழுக்க முழுக்க தவறான செய்தி என்று நடிகர் அக்ஷய் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
''என் தங்கை மற்றும் அவரது குழந்தைகளுக்காக நான் தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க தவறானது. ஏனெனில் அவருக்கு இரு குழந்தைகள் கிடையாது. ஒரே ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. மேலும், அவர் இந்த ஊரடங்கு காலத்தில் எங்கும் பயணம் செய்யவில்லை. இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
இதேபோல நேற்று ‘ஃபில்ஹால் 2’ பாடலுக்கான நடிகர் தேர்வு குறித்த போலிச் செய்திக்கும் அக்ஷய் குமார் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.