பாலிவுட்

‘போலிச் செய்திகளை புறக்கணியுங்கள்’ - ‘ஃபில்ஹால் 2’ நடிகர் தேர்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அக்‌ஷய் குமார்

செய்திப்பிரிவு

அக்‌ஷய்குமார் நடிப்பில் பி ப்ராக் என்பவர் இசையில் வெளியான இசை ஆல்பம் ‘ஃபில்ஹால்’. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை இப்பாடல் 80 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பாடலின் இரண்டாம் பாகம் விரைவில் வரவிருப்பதாகவும் அதற்கான நடிகர்/ நடிகையர் தேர்வு நடக்கவிருப்பதாகவும் இணையத்தில் போலிச் செய்தி ஒன்று உலா வந்தது. இதனை உண்மை என நம்பி பலரும் சமூக வலைதளங்களில் அக்‌ஷய் குமார் மற்றும் ‘ஃபில்ஹால்’ குழுவினரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அக்‌ஷய்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஃபில்ஹால் ரசிகர்களுக்கு,

‘ஃபில்ஹால் 2’ பாடலுக்கான நடிக்க நடிகர்/நடிகையர் தேர்வு நடக்கவுள்ளதாக சில போலி நபர்கள் ஒரு போலிச் செய்தியை பரப்பி வருவது எங்கள் கவனத்துக்கு வந்தது. ‘பில்ஹால்’ குழுவினரோ, தயாரிப்பாளர்களோ, ‘ஃபில்ஹால் 2’ பாடலுக்காக எந்தவொரு நடிகர் தேர்வையும் எந்த வகையிலும் நடத்தவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம்.

உண்மையில் ‘ஃபில்ஹால் 2’ பாடலுக்காக புது நடிகர்களை நாங்கள் தேடவில்லை, ‘ஃபில்ஹால் 2’ பாடலில் ஏற்கெனவே நடித்த நடிகர்களே மீண்டும் நடிப்பார்கள் என்று உறுதி கூறுகிறோம். இதுபோனற போலிச் செய்திகளை ரசிகர்கள் அனைவருக்கும் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

‘ஃபில்ஹால்’ பாடலுக்கு கிடைத்த அதீத அன்பு, மற்றும் வரவேற்புக்கு விரைவில் ‘ஃபில்ஹால் 2’ பாடலை ரசிகர்களுக்கு வெளியிட ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இந்த கடினமான சூழலை கடந்து, விதிமுறைகளை மதித்து விரைவில் ‘ஃபில்ஹால் 2’ பாடலுடன் உங்களை சந்திக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT