நடிப்பது சுத்தமாகப் பிடிக்காதென்றும், வேறு வழியில்லாமல் 'கூம்கேது' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
நவாசுதின் சித்திக் நடிப்பில், புஷ்பேந்த்ர நாத் மிஷ்ரா இயக்கியிருக்கும் திரைப்படம் 'கூம்கேது'. பாலிவுட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு கதாசிரியரின் கதை இந்தப் படம். அனுராக் காஷ்யப் மற்றும் விகாஸ் பல் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் இன்று ஜீ5 ஸ்ட்ரிமிங் சேவையில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஊழல் செய்யும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அனுராக் காஷ்யப், இதுகுறித்துப் பேசியபோது, "எனக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு தேர்வு இல்லை. எனக்கு எப்போதுமே நடிப்பு என்றால் வெறுப்புதான். ஆனால் உணர்ச்சிரீதியான மிரட்டல் எப்போதுமே வேலை செய்யும். மேலும் நவாசுதினுடன் நடிக்கும் ஆசையும் உண்டு. இயக்குநர் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது.
ரகுபீர் யாதவ், இலா அருண் மற்றும் ஸ்வானந்த் ஆகியோருடன் நடிப்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நீங்களே திரையில் பாருங்கள்" என்று கூறியுள்ளார். அனுராக் காஷ்யப் தமிழில் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.