பாலிவுட்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ விரும்புகிறேன்: சோனாக்‌ஷி சின்ஹா

ஐஏஎன்எஸ்

புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தான் உதவ விரும்புவதாக நடிகை சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா பிரபலங்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, நேரலையில் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்றவற்றில் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா ஓவியம் வரைவதில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஓவியங்கள் சமூக வலைதளங்களின் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இதுகுறித்து சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளதாவது:

''நான் என்னுடைய நண்பர்களை மிஸ் செய்கிறேன். ஆனால் வேறொரு கோணத்தில் சிந்திக்கும்போது இது ஒரு பிரச்சினை இல்லை என்று தோன்றுகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். வீட்டில் இருப்பது எனக்குச் சவாலானதாக இருக்கவில்லை.

ஏனெனில் என் அன்புக்குரியவர்களோடு வீட்டில் இருக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும். ஏனென்றால் வெளியே தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு, குடும்பத்தை விட்டு, சாப்பிட ஏதுமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் சவாலானது. நான் அவர்களுக்காக வருந்துகிறேன், அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்.

இந்த ஊரடங்கின் மூலம் நான் மீண்டும் ஓவியம் வரையத் தொடங்கிவிட்டேன். அதன் மூலம் பெரிய அளவில் உதவி செய்ய விரும்புகிறேன். எனவே என்னுடைய ஓவியங்களின் மூலம் நிதி திரட்ட தீர்மானித்துள்ளேன்''.

இவ்வாறு சோனாக்‌ஷி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT