பாலிவுட்

வீடு திரும்ப உதவுங்கள்: சோனுவிடம் வலுக்கும் கோரிக்கைகள்

ஐஏஎன்எஸ்

புலம்பெயர் தொழிலாளிகள் வீடு திரும்ப பாலிவுட் நடிகர் சோனு சூட் போக்குவரத்து ஏற்பாடு செய்தார் என்ற செய்தி வந்ததிலிருந்தே அவரது சமூக வலைதளப் பக்கங்களில் எண்ணற்ற கோரிக்கைகள் குவிந்துள்ளன.

கரோனா நெருக்கடியால் ஊரடங்கு அமலுக்கு வந்தபின் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி வேலை செய்து வந்த பல்வேறு புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உணவின்றி, உறைவிடமின்றி சிக்கித் தவித்தனர். இவர்கள் வீடு திரும்ப ஒரு பக்கம் அரசாங்கம் ஏற்பாடுகள் செய்து வந்தாலும், பிரபலங்கள் சிலரும் இதற்காக உதவி வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட், மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்து வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து தந்தார். இந்தச் செய்தி வந்த பிறகு, இப்படிச் சிக்கித் தவிக்கும் நிறைய பேர், தாங்கள் வீடு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்று சோனு சூட்டைக் கேட்க ஆரம்பித்துள்ளனர். திங்கட்கிழமை அன்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், தான் மகாராஷ்டிராவில் சிக்கியிருப்பதாகவும், தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தான் வீடு திரும்ப சோனு சூட் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதற்கு சோனு சூட், விரைவில் வந்து உங்களைப் பார்ப்பேன் என உன் அம்மாவிடம் கூறிவிடு என்று பதில் கூறியிருந்தார். இப்படி தினம் தினம் எக்கச்சக்கமான கோரிக்கைகள் தனது பக்கத்தில் வருவது குறித்துப் பேசியுள்ள சோனு சூட், "எனது தொலைபேசி வாரத்தில் 7 நாட்களும், 24 மணிநேரமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு, மளிகைப் பொருட்கள் கேட்டு எனக்குச் செய்திகள், அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளியும் வீடு திரும்பும்வரை நான் ஓய மாட்டேன். என்னால் முடிந்த அத்தனை விஷயங்களையும் செய்து அது நடக்கும் என்பதை உறுதி செய்வேன்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT