புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைச் சாடியுள்ளார் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த மாதம் இறுதிவரை பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கினால் புலம்பெயர் தொழிலாளர்கள் தான் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். தங்களுடைய சொந்த ஊருக்கு நடைப்பயணமாகச் செல்லத் தொடங்கினார்கள். அவர்களுடைய பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட்டின் முன்னணி பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
"தாகத்துடன் இருக்கும் தங்களின் குழந்தைகளோடும், பசியோடும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலைகளில் நடந்தோ அல்லது சிறிய கேனில் இருக்கும் மத்தி மீன்களை போல லாரிகளிலோ தங்கள் சக்திக்கு மீறிய கட்டணம் செலுத்தி பயணம் செய்கின்றனர். மத்திய அரசின் 85% , மாநில அரசின் 15% பயணத்தொகை என்னவானது?"
இவ்வாறு ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.