விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்ற 'ரேடியோ பெட்டி' இயக்குநர் ஹரி விஸ்வநாத், அடுத்து இந்தியில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
விஷன் 3 குளோபல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை வென்ற தமிழ்ப் படம் ‘ரேடியோ பெட்டி’. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இயக்குநர் ஹரி விஸ்வநாத் தனது அடுத்த படத்துக்கான பணிகளைக் கவனித்து வந்தார். தற்போது சத்தமின்றி இந்தியில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
'பன்சூரி' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் ரிதுபர்னா சென்குப்தா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு 8 வயதுச் சிறுவன் தன்னில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதுவாகவே மாற நினைக்கிறான். அந்தப் பெருமுயற்சியின் காரணமாக அவனது வாழ்க்கைப் பயணத்தில் அவன் சந்திக்கும் வெற்றி-தோல்விகள், மகிழ்வுகள் - இகழ்வுகள் அவனை எப்படிப் புடம் போடுகின்றன, இறுதியில் அவன் இலக்கை அடைந்தானா இல்லையா என்பதே இந்தப் படத்தின் கதையாகும்.
அங்கன் மாலிக், உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன், மேஹெர் மிஸ்திரி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த ஸெகொர்ஸ் ஹார்ட்ஃபீல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜெயஸ்ரீ லட்சுமி நாராயண் தயாரிப்பு வடிவமைப்பைச் செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தெப்ஜ்யோதி மிஸ்ரா இசையமைக்க, தபஸ் நாயக் ஒலி வடிவமைப்புப் பணிகளையும், அனுபம் பேனர்ஜி பாடல் வரிகளையும் எழுதியுள்ளனர்.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, உலகளாவிய வெளியீட்டுக்கு 'பன்சூரி' படம் தயாராகி வருகிறது.