பாலிவுட்

மீண்டும் வண்டி நிறைய மளிகைப் பொருட்கள்: சல்மான் கான் தானம்

ஏஎன்ஐ

அன்னதானம் சவால் என்ற முன்னெடுப்பை சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ள நடிகர் சல்மான் கான், கஷ்டப்படும் மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களைத் தந்து உதவியுள்ளார்.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தினக்கூலிப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான வருமானமின்றி, உணவின்றி பலர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். கோவிட்-19 சிகிச்சை கொடுக்க களத்தில் இருக்கும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் தருவது, குடிசைப் பகுதி மக்களுக்கு உதவி செய்வது எனப் பலரும் தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அவ்வப்போது ஏதாவது உதவிகளைச் செய்து வருகிறார். திரைத்துறையில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்களின் கணக்குகளுக்கு சமீபத்தில் நேரடியாகப் பணம் அனுப்பி வைத்தார்.

சமீபத்தில், ஊரடங்கால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு உதவிடச் சொல்லி, அன்னதான சவால் என்ற ஒரு முன்னெடுப்பை கையிலெடுக்க மக்களிடம் கேட்டுக் கொண்டார். ட்விட்டர் மூலமாக இது பற்றிப் பகிர்ந்திருந்தார்.

தற்போது தன் பங்குக்கு, கஷ்டப்படும் மக்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை சல்மான் கான் அனுப்பியுள்ளார். இன்ஸ்டாகிராமில் சல்மான் கான் பகிர்ந்துள்ள வீடியோவில், அவரது பான்வெல் பண்ணை வீட்டில் அவரும், அவர் நண்பர்களும், ஒரு பெரிய டிரக்கில் மளிகைப் பொருட்கள் பொட்டலங்களை ஏற்றுவது தெரிகிறது.

சல்மான் கானுடன் அவரது சகோதரர் மகன் நிர்வான் உட்பட குடும்பத்தினர் சிலரும், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், லூலியா வண்டூர் உள்ளிட்ட திரையுலக நண்பர்களும் ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து தங்கியுள்ளனர். அவர்களையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

SCROLL FOR NEXT