கடந்த சில வருடங்களாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர், அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்தார். நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) இரவு, உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (ஏப்ரல் 30) காலை சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
மும்பை மரைன் லைன்ஸ் சந்தன்வாடி பகுதியில் இருக்கும் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் ரிஷி கபூர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கடும் ஊரடங்கு காரணமாக டெல்லியில் இருக்கும் ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூரால் தன் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமுடியவில்லை. டெல்லியில் இருந்தபடியே வீடியோ காலில் தன் தந்தையின் இறுதிச் சடங்கை கண்ணீருடன் பார்த்தார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தந்தை ரிஷி கபூர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரித்திமா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘நான் உங்களை நேசிக்கிறேன் அப்பா.. எப்போதும் உங்களை நேசிப்பேன். என் வலிமையான போராளியின் ஆன்மா சாந்தி அடையட்டும். நான் உங்களை எப்போதும் மிஸ் செய்வேன். தினமும் உங்களுடனான வீடியோ அழைப்பை மிஸ் செய்வேன். உங்களை வழியனுப்பி வைக்க நான் அங்கே இருந்திருக்க வேண்டும். மீண்டும் சந்திப்போம் அப்பா.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரிஷி கபூரின் மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.