பாலிவுட்

இர்ஃபான் கானின் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் வரும் தானியங்கி செய்தி: ரசிகர்கள் உருக்கம்

செய்திப்பிரிவு

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இதனிடையே, நேற்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் இர்ஃபான் கானின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தனிப்பட்ட முறையில் குறுந்தகவல் அனுப்பினால் அதற்கு வரும் தானியங்கி பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இர்ஃபான் கான் மறைந்தவுடன் அவரது ரசிகர் ஒருவர் அவரது இன்பாக்ஸுக்கு ‘உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஆளுமையே’ என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

அதற்கு வந்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

''என் வாழ்க்கையோடு நீங்கள் அறியாத பலவழிகளில் இணைந்து இருந்தமைக்கு நன்றி. என் வளங்கள் என்பது பொருளாதாரம் சார்ந்தவை அல்ல. உண்மையில் அது உங்களைப் போன்ற ரசிகர்களிடம் உள்ளது''.

இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியின் ஸ்க்ரீன்ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இர்ஃபான் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்கள் பலரும் இதைப் பகிர்ந்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT