பாலிவுட்

இர்ஃபான் கான் மரணம் பற்றிய செய்தியில் உண்மையில்லை, அவர் நோயுடன் போராடி வருகிறார்: செய்தித் தொடர்பாளர் 

ஐஏஎன்எஸ்

நடிகர் இர்ஃபான் கான் காலமானார் என்ற செய்தி புரளி மட்டுமே என்று அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான சிகிச்சை அவருக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை அன்று இர்ஃபான் கான் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் அவர் மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குப் பெருங்குடலில் பிரச்சினை இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது.

செவ்வாய்க்கிழமை இரவு, ஒரு சில ஊடகங்கள், இர்ஃபான் கான் காலமாகிவிட்டதாகச் செய்திகள் வெளியிட்டன. எனவே இரவு 1 மணிக்கு இர்ஃபானின் செய்தித் தொடர்பாளர், அந்தச் செய்திகள் வெறும் புரளிகள் மட்டுமே என்று மறுப்பு அறிக்கை வெளியிட நேர்ந்தது.

"இர்ஃபானின் ஆரோக்கியம் குறித்து அதிதீவிரமான கற்பனைகள் செய்யப்படுகின்றன என்பதை அறிவது ஏமாற்றமளிக்கிறது. அவர் மீது கவலை கொண்டவர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் ஒரு சிலர் மோசமான புரளிகளைப் பரப்பி பதட்டத்தை ஏற்படுத்துவது வேதனையாக இருக்கிறது.

இர்ஃபான் வலிமையான மனிதர். அவர் இன்னமும் (நோயுடன்) போராடிக் கொண்டிருக்கிறார். தயவு செய்து புரளிகளை நம்ப வேண்டாம் என்றும், கற்பனையான உரையாடல்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். அவரது ஆரோக்கியம் குறித்த செய்திகளைத் தெளிவாகப் பகிர்ந்து வருகிறோம். அது தொடரும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT