பாலிவுட்

தனது பிளாஸ்மாவைத் தானம் கொடுக்க விரும்பும் பாடகி கனிகா கபூர்

ஐஏஎன்எஸ்

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மற்ற கோவிட்-19 தொற்றுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக, தனது பிளாஸ்மாவைத் தானம் கொடுக்க கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தை (லக்னோ, உ.பி.) அணுகியுள்ளார். இதற்காக அந்தப் பல்கலைக்கழகத்தின் மாற்றீடு மருத்துவத் துறையின் பேராசிரியர் துலிகா சந்திராவிடம் கனிகா பேசியுள்ளது தெரியவந்துள்ளது.

"அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். மற்ற கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவ விரும்புவதாகச் சொன்னார். துணைவேந்தர் பேராசிரியர் எம்.எல்.பி பட் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார். இனி, அவர் பிளாஸ்மா தானத்துக்குத் தகுதியானவரா என்பதை அறிய அவருக்குப் பரிசோதனைகள் செய்வோம்" என்று துலிகா சந்திரா கூறியுள்ளார்.

பிளாஸ்மாவைத் தானம் செய்பவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12.5 புள்ளிகளுக்கு அதிகமாகவும், எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். சர்க்கரை நோய், இருதய நோய், மலேரியா உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கக் கூடாது.

செவ்வாய்க்கிழமை கனிகாவுக்குப் பரிசோதனை செய்யப்படும். அவர் தகுதியானவர் என்றால் புதன்கிழமை அன்று அவர் பிளாஸ்மா தானம் செய்வார்.

பாலிவுட்டில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட முதல் பிரபலம் கனிகா கபூர்தான். தனக்குத் தொற்று இருப்பது தெரியாமல் அவர் லக்னோவில் சில பெரிய அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதில் அனைவருக்குமே கரோனா தொற்று பரவியது.

தொடர்ந்து கனிகா 15 நாட்களுக்கும் மேலாக கரோனாவுக்கான சிகிச்சை பெற்று ஏப்ரல் முதல் வாரத்தில் மருத்துவமனையிலிருந்து திரும்பினார். முன்னதாக அவர் மீது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோயை, தொற்றைப் பரப்பும் வகையில் நடந்து கொண்டதால் இபிகோ 269 மற்றும் 270 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு கனிகா விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, 58 வயதான கரோனா தொற்றுள்ள நோயாளிக்கு பிளாஸ்மா மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அந்த நோயாளி தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோவிட்-19லிருந்து மீண்டு வந்த மூன்று பேர், அந்தப் பல்கலைக்கழகத்தில் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT